முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் எச்.ராஜா. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக அவ்வப்போது ஆக்ரோஷமான கருத்துக்களை பேசுவதை வாடிக்கையாக கொண்டவர் எச்.ராஜா. அவ்வப்போது பிரஸ் மீட்களின் போதும் சரவெடியாக மீடியாக்களிடம் வெடித்து பேசும் எச்.ராஜா, முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் குறித்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட எச்.ராஜா, நீதிமன்றம் குறித்து செய்தியாளர்களிடம் ஆவேசமாக தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையானது. அப்போது எச்.ராஜா மீது வழக்கு பதியப்பட்டாலும் கைது செய்யப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி. செல்வம் பெஞ்ச் அப்போது எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் எச்.ராஜாவுக்கு நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜரானார். இந்த விசாரணையின் போது, நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா. அத்துடன் நான் பேசியது தவறுதான். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். நான் பேசியது தவறு என்பதை தாமதமாகத்தான் உணர்ந்தேன் எனவும் நீதிமன்றத்திலேயே தெரிவித்தார். இதனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்படி அவ்வப்போது தனது ஆக்ரோஷ பேட்டிகளால் பரபரப்பை ஏற்படுத்தும் எச்.ராஜா மீது தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற ஊர்வலத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு மதத்தினர் இடையே மோதல் போக்கை உருவாக்கும் விதமாக பேசியதாக 4 பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.