மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து: டிகே சிவகுமார்

மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது; காவிரி பிரச்சனையில் இன்று பந்த் நடத்த வேண்டாம் என்று அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பின்னர் துணை முதல்வர் டிகே சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கர்நாடகா அணைகளுக்கு வினாடிக்கு 8,000 கன அடி நீர் வரத்து உள்ளது. காவிரியில் தமிழ்நாடு அரசு முதலில் 24,000 கன அடி நீரை தர கோரியது. ஆனால் நாம் வினாடிக்கு 3,000 கன அடி நீரைத்தான் திறக்க முடியும் என்றோம். காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 10,000 கன அடிநீர் தர சொன்னது. நாம் அதனை ஏற்கவில்லை. இதனால் வினாடிக்கு 5,000 கன அடி நீராக குறைத்தனர். உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்கவும் இல்லை. கர்நாடகா வாதத்தையும் ஏற்கவில்லை. இதனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 26-ந் தேதி வரைதான் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்படும்.

கர்நாடகா விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. ஆகையால் முழு அடைப்பு, போராட்டங்களை விவசாயிகள் கைவிட வேண்டும். முழு அடைப்பு போன்றவற்றால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். ஆகையால் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

உச்சநீதிமன்ற விசாரணையின் போது மேகதாது அணை கட்டுமான திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி நீரை தர கர்நாடகா தயாராக உள்ளது; அப்படியானால் அவர்கள் எத்தனை அணைகளை வேண்டுமானால் கட்டலாமே.. உங்களுக்கு ஏன் பிரச்சனை? ஏன் எதிர்க்கிறீர்கள்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாட்டு தரப்பிடம் கேள்வி எழுப்பினர். ஆகையால் உச்சநீதிமன்றமும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமாக உள்ளது. இதனை புரிந்து கொண்டு பாஜகவினர் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணை கட்டுமானத்துக்கு தேவையான ஒப்புதல்களை பெற்றுத் தர உதவ வேண்டும்.

கடந்த காலங்களில் பாஜக அரசு, வினாடிக்கு 10,000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டதும் உண்டு. இதில் அரசியல் செய்வதற்கு நாங்கள் விரும்பவில்லை. என்னதான் உச்சநீதிமன்றத்துக்கு போய் மேல்முறையீடு செய்தாலும் காவிரி மேலாண்மை ஆணையத்திடமே போக சொல்லும் என்கிற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். மேகதாது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளுக்கும் கர்நாடகா அரசு தயாராக உள்ளது. இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.