அண்ணாமலையை முதல்வராக்க பாஜக வலியுறுத்தியதால் கூட்டணி முறிவு: கேசி கருப்பணன்

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால்தான் அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டது என திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் கேசி கருப்பணன்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவை அண்ணாமலை விமர்சித்தார். எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர்களை விமர்சிப்பதை நாங்கள் எப்படி பொறுக்க முடியும்; அதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என அதிமுக அறிவித்தது. இந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்; 2024 லோக்சபா தேர்தல் மட்டுமல்ல 2026 சட்டசபை தேர்தலிலும் இதுதான் எங்கள் நிலைப்பாடு. இரு தேர்தல்களிலும் அண்ணா திமுக தலைமையில் புதிய மெகா கூட்டணி அமைக்கப்படும் எனவும் அக்கட்சி அறிவித்தது. ஆனாலும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இது அப்பட்டமான ஒரு அரசியல் நாடகம்; லோக்சபா தேர்தலின் போது பாஜகவும் அதிமுகவும் மீண்டும் கூட்டணி அமைப்பார்கள்; அப்போது இணைந்தே தேர்தல் பிரசாரம் செய்வார்கள் என்று விமர்சித்து வந்தனர்.

இதனிடையே, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என அண்ணாமலை பகிரங்கமாக தெரிவித்தார். இந்த கோபத்தில்தான் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது என ஓ.பன்னீர்செல்வம் அணியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார்.

தற்போது அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.சி. கருப்பணன் திடுக்கிடும் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். ஈரோடு அந்தியூர் அருகே குருவரெட்டியூரில் நடைபெற்ற அதிமுக பொதுகூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளாரக ஏற்க வேண்டும்; அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என எங்களை பாஜக வலியுறுத்தியது. இதனால்தான் பாஜகவுடனான கூட்டணியையே முறித்து கொண்டோம் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது புதிய பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கருப்பணன் கருத்து குறித்து அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி கூறுகையில், பொதுவாக சமூகவலைதளங்களில் பார்த்த சில கருத்துகள் அப்படியே நம் மனதில் பதியும். அது பேசும் போது மனதில் இருப்பது அப்படியே வெளியே வந்துவிடும். அது போல்தான் கருப்பணனும் சில கருத்துகளை சமூகவலைதளங்களில் பார்த்துள்ளார். அதை அப்படியே வெளியே சொல்லிவிட்டார். வரும் தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு நன்றாக தெரிந்து விடும். எனவே 2026 இல் முதல்வராக எடப்பாடி பழனிசாமியே வருவார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் பலமும் மக்களுக்கு தெரியும். அது போல் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சியில் செய்த நலத்திட்டங்களையும் திமுக ஆட்சியின் அவலங்களையும் எஜமானர்களான மக்களிடம் எடுத்துச் செல்வோம் என்றார்.