சென்னையில் ஆசிரியர்களின் போராட்டத்தில் ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

ஆசிரியர்களின் போராட்டம் வலுத்து வரும்நிலையில், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதம் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.. சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி நேற்று முன்தினம் முதல் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்து திரும்பப் பெற்று ஆசிரியர்கள் முழு நேரமும் சுதந்திரமாக மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இணையதளத்தில் புள்ளி விவரங்களை பதிவு செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து முழுமையாக கற்பித்தல் பணியில் ஈடுபட தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சென்னை, டிபிஐ வளாகத்தில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில், அடுத்தடுத்து 21 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவெல்லாம் கொட்டிய மழையிலும் ஆசிரியர்கள் போராட்டம் நடந்தது. அப்போது, 9 பேரும், நேற்றைய தினம் 21 பேரும் மயங்கி விழுந்தனர். வயது முதிர்வு, வெயிலின் கொடுமை தாங்காமல் இப்போதுவரை 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், மற்ற ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருப்பதால், சென்னையில் பரபரப்பு தொடர்கிறது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகமே, இதனால், ஆசிரியர்களின் போராட்ட களமாக மாறி உள்ளது.

அதேபோல, அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. மூப்பு அடிப்படையில், பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினரும் போராட்டம் நடத்தினார்கள். இப்படி அனைத்து சங்கத்தினருமே, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு வருகிறார்கள். இதனால், டிபிஐ வளாகத்தில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனினும், மயங்கி விழுந்தாலும் பரவாயில்லை, தங்கள் கோரிக்கைகளை நிறைவேறும்வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அனைத்து ஆசிரியர் சங்கங்களும் உறுதிகாட்டி வருகின்றன.