காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
தற்போதுள்ள காங்கிரஸ் அரசை மாற்ற வேண்டும் என சத்தீஸ்கர் முடிவு செய்துவிட்டது. அதற்கான உற்சாகம் உங்களிடம் (வாக்காளர்களிடம்) தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் அராஜகத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு சத்தீஸ்கர் மக்கள் வந்துவிட்டார்கள். உங்கள் கனவுகள் நனவாக நான் உத்தரவாதம் அளிக்கிறேன். சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே உங்களின் கனவுகள் நனவாகும். சத்தஸ்கரை முன்னேற்ற டெல்லியில் இருந்து எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு தோல்வி அடையச் செய்துவிடுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சத்தீஸ்கருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சாலைகள் அமைத்தல், ரயில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதி அளித்திருக்கிறது. மாநிலத்திற்கு நிதி பற்றாக்குறையை நாங்கள் வைக்கவில்லை.
சத்தீஸ்கருக்கு மத்திய அரசு எந்த அநீதியையும் அளிக்கவில்லை என்று மாநில துணை முதல்வர் சொல்லி இருக்கிறார். அதுவும் பொது மக்கள் முன்னிலையில். மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மத்திய அரசு வழங்கி உள்ளது. ஆனால், மாநில அரசு திட்டங்களை ஒன்று நிறுத்துகிறது அல்லது ஒத்திபோடுகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறைக்காக மத்திய அரசு ரூ.300 கோடி மட்டுமே ஒதுக்கியது. ஆனால், பாஜக அரசு ரூ.6,000 கோடி ஒதுக்கி உள்ளது. இதுதான் மோடி மாடல். சத்தீஸ்கர் மீதான அன்புதான் இதற்குக் காரணம்.
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எனவே அது தற்போது சட்டமாகிவிட்டது. இந்த மசோதா 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. ஆனால், நாங்கள் அதனை நிறைவேற்றிவிட்டோம். இதற்காக காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் எங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள்.
பெண்களின் ஆசிர்வாதம் அனைத்தும் மோடிக்கே சென்றுவிடும் என அவர்கள் நினைக்கிறார்கள். உங்கள் ஒற்றுமையையும் விழிப்புணர்வையும் நினைத்து அவர்கள் அஞ்சுகிறார்கள். எனவே, தற்போது சாதியின் பெயரால் பெண்களை பிரிக்க அவர்கள் விரும்புகிறார்கள். மத்திய அரசின் முடிவு அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பதை நான் சத்தீஸ்கர் மகளிருக்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் பொய் வலையில் விழாதீர்கள்.
காங்கிரஸ் கட்சியைப் போல ஏழைகளுக்கு அநீதி இழைத்தவர்கள் வேறு யாரும் கிடையாது. கொரோனா காலத்தின்போது அனைவருக்கும் இலவச உணவுப் பொருட்களை வழங்க நான் முடிவெடுத்தேன். ஆனால்,சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசு அதிலும் ஊழல் செய்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.