கிருஷ்ணகிரியில் கர்நாடகா பேருந்தை சிறை பிடித்த நாம் தமிழர் கட்சியினர்!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சியினர் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் போது கர்நாடகா அரசு பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டன.

தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுக்கிறது. கர்நாடகா அரசின் ஆதரவுடன் கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்துகின்றன. மண்டியா பந்த், பெங்களூர் பந்த் மற்றும் கர்நாடகா பந்த் என போராட்டங்கள் நடத்தப்பட்டன. கர்நாடகாவில் நடந்த போராட்டங்களின் போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படம் அவமரியாதையும் இழிவும் செய்யப்பட்டது. இதற்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், “காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும் தமிழகத்துக்கான உரிமைகளைப் பெற்றுத் தராமல் காலம் தாழ்த்தி வரும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்தும் தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட திறனற்ற தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசைக் கண்டித்தும் இன்று மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்” எனவும் சீமான் அறிவித்திருந்தார்.

இதன்படி இன்று காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டங்களை நடத்தினர். கிருஷ்ணகிரியில் கர்நாடக அரசு பேருந்தை சிறை பிடித்து ம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் மத்திய அரசின் பி.எஸ்.என்.அலுவலகத்துக்கும் நாம் தமிழர் கட்சியினர் பூட்டு போட்டனர். திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல தருமபுரியிலும் போராட்டம் நடத்தப்பட்டது. காவிரி நதீநீர் எங்களது உரிமை என்ற முழக்கத்துடன் கரூர், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. கரூரில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா கொடும்பாவி எரிக்கப்பட்டது.