பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு பரவலாக வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தனியார் நிறுவனத்த்துக்கு ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்துப் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் காலை உணவுத் திட்டம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சென்னையில் மொத்தம் 358 பள்ளிகளில் 33,000 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறுவது குறிப்பிடத்தக்கது.
காலை உணவுத் திட்டம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.