கோடநாடு கொலை, கொள்ளை குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகள் மூலம் நடந்த தகவல் பரிமாற்றம் தொடர்பான விபரம் பென்டிரைவ் மூலமாகவும், அறிக்கையாகவும் உதகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இந்த வழக்கின் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்பட உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரலில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி காயமடைந்தார். எஸ்டேட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த சம்பவம் நடந்தது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதையடுத்து கைது நடவடிக்கை என்பது மேற்கொள்ளப்பட்டது.
வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தொடர்ந்து இந்த வழக்கில் சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தன. அதாவது கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் என கூறப்படும் கனகராஜ் 2017 ஏப்ரல் 28ல் விபத்தில் பலியானார்.
இதனால் இந்த வழக்கு என்பது பல குழப்பங்களை எதிர்கொண்டது. மேலும் வழக்கு என்பது இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, நீலகிரி, சேலம் பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை 189 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் குறித்த தகவல் பரிமாற்ற விபரங்கள் கிடைத்தால் அடுத்தக்கட்ட விசாரணைக்கு உதவியாக இருக்கும் என சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் கூறினர். இதையடுத்து அவர்களின் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை கோவையில் உள்ள தொழில்நுட்ப ஆய்வகத்துக்கு நீதிமன்றம் அனுப்பி ஆய்வு செய்ய கூறியது.
இதையடுத்து கோவை தொழில்நுட்ப ஆய்வகத்தில் இருந்து உதகை நீதிமன்றத்தில் இன்று 3 பேரின் செல்போன்கள், சிம்கார்டுகள் வழியாக 2017 காலக்கட்டத்தில் நடந்த தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரம் 3 பென் டிரைவ்களில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதுபற்றிய விபரங்கள் 50க்கும் அதிகமான பக்கங்களில் அறிக்கையாகவும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விபரங்கள் அனைத்தும் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வழங்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் சிபிசிஐடி போலீசாரிடம் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த விபரம் என்பது கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என சிபிசிஐடி போலீசார் நம்புகின்றனர். அதோடு தற்போதைய ஆய்வின் மூலம் இவர்களிடம் அதிமுகவினர் யாரும் பேசினார்களா? இல்லை கொலை, கொள்ளை பின்னணி குறித்து வேறு யாரும் பேசினார்களா? என்ற விபரங்கள் தெரியலாம் என சிபிசிஐடி போலீசார் நம்பிக்கையுடன் உள்ளனர்.