சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது: அமித் ஷா

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆட்சியை தக்கவைக்கை மத்திய அரசு தீவிர திட்டம் தீட்டி வருகிறது. இந்த நிலையில், கட்சியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் வண்ணமாக கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:-

இந்தப் பேரணியில் அதிகப்படியான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது மக்களின் மனநிலையை குறிக்கிறது. மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தை சீரழித்துவிட்டார். வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். அதற்கு முன்னர், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறுவதை நீங்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ – Citizenship Amendment Act) என்பது நாட்டின் சட்டம். இந்தச் சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், மத்திய அரசு இதுவரை அதற்கான விதிகளை வகுக்கவில்லை. இதனால் சட்டம் இழுபறியில் உள்ளது. இந்த அரசாங்கத்தை தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் பாஜகவைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தரப் பிரதேச எம்.பி., அஜய் மிஸ்ரா, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான (சிஏஏ) விதிகள் மார்ச் 30, 2024-க்குள் மத்திய அரசால் வகுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (CAA) 2019 டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு, டிசம்பர் 12-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலளித்த நிலையில் சட்டமானது. பாஜக அரசு கொண்டு வந்த இந்தச் சட்டத்தால், இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.