வெறுப்பு பேச்சு: நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாரா என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

வெறுப்பு பேச்சுகளால் ஏற்படும் வன்முறைகளை கட்டுப்படுத்த நோடல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டாரா? இல்லையா? என்பது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் வாதத்தை தொடர்ந்தார். அப்போது, ‛‛28 மாநிலங்கள் வெறுப்பு பேச்சு கண்காணிப்பு மற்றும் வன்முறை தடுப்புக்காக நோடல் அதிகாரியை நியமனம் செய்துள்ளது. இருப்பினும் குஜராத், நாகலாந்து, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் கடிதத்துக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த மாநிலங்களில் வெறுப்பு பேச்சு கண்காணிப்பு மற்றும் வன்முறை தடுப்புக்கான நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா? என்பது தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‛‛வெறுப்பு பேச்சுக்களால் ஏற்படும் வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறை கண்காணிக்கும் வகையிலான நோடல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்களா? இல்லையா? என்பது குறித்து குஜராத், நாகலாந்து, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்” எனக்கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதற்கிடையே தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது தொடர்பாக உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உடனே முன்னெடுக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தனிநபர் சார்ந்த வழக்கில் இப்போது உத்தரவு பிறப்பிக்க முடியாது. தனிநபர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் பட்டிலிடப்படும்போது அதுபற்றிய விசாரணை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.