திராவிட மாடல் ஆட்சியல்ல; தந்திர மாடல் ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

“திமுகவின் ஆட்சி திராவிட மாடல் ஆட்சியல்ல. மாறாக தந்திர மாடல் ஆட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்தி டெங்கு, ஃப்ளு போன்ற விஷக் காய்ச்சல்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகத் தேவையான மருத்துவ உதவிகளை அளித்திட வேண்டும்

அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று சொல்லிவிட்டு அதற்கான பேருந்துகளை தந்திரமாக அரசு குறைத்துள்ளது. அதேபோல் பெண் பயணிகளிடம் சாதி, கைபேசி எண் விவரம் கேட்கப்படுகிறது. இது சிக்கலை ஏற்படுத்தும். இது திராவிட மாடல் ஆட்சி அல்ல தந்திர மாடல் ஆட்சி.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கிய தொகுப்பில் ஒழுகும் நிலையில் வெல்லம் இருந்தது. தமிழ்நாட்டில் வெல்லம் தயாரிக்கப்படாததுபோல் வெளிமாநிலத்தில் இருந்து தரமற்ற வெல்லத்தை வாங்கிக் கொடுத்தனர். பொங்கல் தொகுப்பில் நடந்த மோசடி தொடர்பாக நாங்கள் தொடர்ந்த வழக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டாவது தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அதேபோல், திமுக அரசு விவசாயிகளைக் காக்கத் தவறிவிட்டது. முதல்வர் நானும் டெல்டாகாரன் தான் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது. டெல்டா விவசாயிகளுக்கு பாசனத்துக்குத் தேவையான உரிய நீர் ஆதாரத்தைப் பெற்றுத் தர வேண்டும்.ஏற்கெனவே குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் வேதனையில் இருக்கின்றனர். திமுக ஆட்சியில் ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய உதவிகளை அரசு செய்ய வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.