“சீனாவின் புதிய வைரஸ் காய்ச்சல் தாக்குதல் தமிழகத்தில் இதுவரை இல்லை” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில் மாவட்ட தாய்சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கான மடிக்கணினிகளை வழங்கி கர்ப்பகால நீரிழிவு நோய் செயல்பாட்டு வழிகாட்டி கையேடு மற்றும் பதாகையினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
சீனாவில் ஒரு புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. அந்த வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை அதிகமாக பாதிப்பதாக சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறது. மேலும், நமது பொது சுகாதாரத்துறை சார்பாக காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிக கவனமாக கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். எனவே புதிய வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இதுவரை இல்லை. என்றாலும் மழைக்கால நோய்கள் என்கின்ற வகையில் இன்புளுயன்சா, டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவேதான் இத்தகைய நோய் பாதிப்புகளை தடுப்பதற்கு தமிழக முதல்வரின் வழிகாட்டுதன்படி, வாரந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. வாரந்தோறும் நடத்தப்பட்ட மருத்துவ சிறப்பு முகாம்களின் எண்ணிக்கை 10,576. இதில் பயன்பெற்ற பயனாளிகள் 5,21,853 இதில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டவர்கள் 1791, சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் 917, இவர்கள் அனைவருக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த மாதம் டிசம்பர் வரை இன்னும் 5 வாரங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஒரு பருவமழைக் காலங்களில் 20,000-த்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது மருத்துவத்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை. தற்போது பூச்சியியல் துறை சார்பில் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூச்சியியல் வல்லுநர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். கொசு என்பது தமிழகத்திலோ அல்லது சென்னையிலோ மட்டுமல்ல. இது உலகளாவிய பிரச்சினை. கொசு உற்பத்தியை தடுப்பதற்கு கொசு பெருக்கத்தை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு மருந்து அடிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.
மழைக்காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் அதிகரிப்பதன் காரணம் நீர்த்தேக்கம் அதிகமாக இருப்பதால்தான். எனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றது. எனவே ஆராய்ச்சிகள் மூலம் ICMR, WH போன்ற ஆராய்ச்சி அமைப்புகளை ஆராய்ச்சிகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.