சீனாவில் மணிக்கு 1,000 கி.மீ வேகத்தில் ஓடும் அதிவேக புல்லட் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சீனாவின் ரயில்வே துறை அதிவேக ரயில்களை இயக்குவதில் முன்னணியில் உள்ளது. சைனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் ‘அல்ட்ரா ஹை-ஸ்பீட் மேக்னடிக் லெவிடேஷன் (மேக்லெவ்)’ என்ற ரயில் தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் 1,000 கிமீ வேகத்தில் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த ரயிலின் சோதனை ஓட்டமானது ஷான்சியில் நடந்தது. இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள பைப்லைனுக்குள் வெற்றிடத்தை உருவாக்கி, ரயிலை சோதனை முறையில் இயக்கினர். ரயிலின் சோதனை திருப்திகரமாக இருந்ததால், எதிர்காலத்தில் ஹாங்சோ – ஷாங்காய் இடையே இந்த அதிவேக ரயில் இயக்கப்படும்.
இதுகுறித்து தொழில்நுட்பக் குழு விஞ்ஞானி லி பிங் கூறுகையில், ‘ரயிலின் முதற்கட்ட சோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் சீனாவின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு ஒரு சில மணிநேரங்களில் பயணிக்க முடியும். மணிக்கு 623 கிமீ வேகத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் 1,000 கி.மீ வேகத்தில் இந்த ரயில் ஓடும். தற்போது சீனாவில் ஓடும் அதிவேக புல்லட் ரயில்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கி.மீ. ஆகும்’ என்று கூறினார்.