தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 35.5 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 2.94 ஆயிரம் கோடி) அபராதம் விதித்துள்ளது நியூ யார்க் நீதிமன்றம்.
தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தன்னுடைய சொத்து மதிப்பு பற்றிப் பொய்யான தவறான தகவல்களை டிரம்ப் தந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு நடந்துவந்த சிவில் வழக்கு விசாரணையின் முடிவில் பெருந்தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று நீதிபதி ஆர்தர் என்கோரன் தீர்ப்பளித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப், அவருடைய இரு மூத்த மகன்கள், அவருடைய நிறுவனம், நிர்வாகிகள் ஆகியோர் திட்டமிட்டுத் தங்கள் சொத்துகள் பற்றிப் பொய்யான நிதி விவரங்களை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளித்துத் தொடர்ந்து ஏமாற்றிவந்துள்ளனர். இந்தத் தீர்ப்பின் காரணமாக டிரம்ப் குடும்பத்தினர் நடத்திவரும் வணிக நிறுவனம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதுடன், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் செயல்பட வேண்டிய கட்டாயமும் நேர்ந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பின் காரணமாக, எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடக் கூடிய வகையில் முன்னேறிவந்த டொனால்ட் டிரம்ப்புக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டிரம்ப்க்கு அபராதம் 35.5 கோடி டாலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதும், அமெரிக்க சட்டப்படி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதால் அவர் மேலும் அதிகமாக – ஏறத்தாழ 45 கோடி டாலர் வரை – தொகை செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. செலுத்தாவிட்டால் இந்தத் தொகை மேலும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.