முழு வெற்றி கிட்டும் வரை இஸ்ரேல் சண்டையிடும்: பெஞ்சமின் நெதன்யாகு!

ராஃபா தாக்குதல் திட்டத்தை கைவிடுவது, ஹமாஸுக்கு எதிரான போரில் தோற்பதற்கு சமமானது என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை கொடூரமாக படுகொலை செய்தனா். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், காஸாவின் தெற்கு எல்லை நகரமான ராஃபாவில் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.

அண்மைக் காலமாக ராஃபா நகரிலும் இஸ்ரேல் ராணுவம் தீவிர குண்டுவீச்சு நடத்தி வருவதில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனா். அத்துடன், விரைவில் அந்த நகருக்குள் தரைவழியாகவும் நுழைந்து தாக்குதல் நடத்தப் போவதாகக் கூறி இஸ்ரேல் அரசு அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. காஸாவின் பெரும்பாலான மக்கள்தொகை ராஃபாவின் நெரிசலில் தஞ்சமடைந்துள்ள நிலையில், ராஃபாவில் தாக்குதல் நடத்தினால் அது மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அமெரிக்கா உள்பட பன்னாட்டு அமைப்புகள் பலவும் எச்சரித்து வருகின்றன.

இந்நிலையில், ஜெருசலேமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ராஃபா தாக்குதலை முன்னெடுக்கும் திட்டத்தை கைவிட உலக தலைவர்கள் பலர் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தாலும், ராஃபாவில் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் தெளிவாக திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ராஃபா தாக்குதல் திட்டத்தை கைவிடுவது, ஹமாஸுக்கு எதிரான போரில் தோற்பதற்கு சமமானது என்றும், எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் எனவும், முழு வெற்றி கிட்டும் வரை இஸ்ரேல் சண்டையிடும் என அவர் சூளுரைத்துள்ளார். அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் செயல்பட்டு வருவதாகவும், அமெரிக்காவின் ஆதரவுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இஸ்ரேல் பிணைக்கைதிகள் 134 பேர் ராஃபாவில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர்களும் அங்கு தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், ராஃபாவில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறிய பின்னரே, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.