காஷ்மீரில் இருந்து பஞ்சாப்புக்கு ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்!

காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் 100 கி.மீ. தொலைவு வரை ஓடியது. ரயில்வே ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி ரயிலை நிறுத்தினர்.

காஷ்மீரின் கதுவா ரயில் நிலையத்தில் 53 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் நேற்று காலை 7.25 மணிக்கு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சரக்கு ரயில் பெட்டிகளில் கருங்கற்கள், கான்கிரீட் சிலாப்புகள் ஏற்றப்பட்டிருந்தன. சரக்கு ரயிலின் ஓட்டுநர், உதவி ஓட்டுநரின் பணி முடிந்து மற்றொரு ஓட்டுநர், உதவி ஓட்டுநர் பணிக்கு வர வேண்டும். ரயில் இன்ஜின் அணைக்கப்படாத நிலையில் பணி முடிந்த ஓட்டுநர், ஹேண்ட் பிரேக் போட மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. புதிய ஓட்டுநர் வருவதற்குள் சரக்கு ரயில் நகரத் தொடங்கியது. சரிவான பகுதி என்பதால் அந்த ரயில் வேகமாக ஓடத் தொடங்கியது.

தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கதுவா ரயில் நிலையத்திலேயே சரக்கு ரயிலை நிறுத்த முயன்றனர். ஆனால் எந்த ஓட்டுநராலும் ரயிலில் ஏற முடியவில்லை. அங்கிருந்து ரயில் புறப்பட்டு சுமார் 100 கி.மீ. வேகத்தில் தண்டவாளத்தில் சீறிப் பாய்ந்தது. உடனடியாக சரக்கு ரயில் சென்ற பாதையில் இருந்த அனைத்து ரயில்களும் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டன. அனைத்து ரயில்வே கேட்டுகளும் மூடப்பட்டு வாகனங்கள், பொதுமக்கள் தண்டவாளத்தை கடப்பது தடுக்கப்பட்டது.

பஞ்சாபின் பதான்கோட் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலை நிறுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தண்டவாளத்தில் ‘ஸ்டாப்பர்கள்’ (மரத் தடுப்புகள்) அமைக்கப்பட்டு ரயிலை நிறுத்த முயன்றனர். ஆனால் தடுப்பை உடைத்து சரக்கு ரயில் சீறிப் பாய்ந்தது. பதான்கோட் கன்டோன்மென்ட், கன்ட்டோரி, மிர்தால், பங்களா, முகேரியன் ஆகிய ரயில் நிலையங்களிலும் மரத்தடுப்புகள், மணல்மூட்டைகள் மூலம் சரக்கு ரயிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. எனினும் ரயிலின் வேகம் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இறுதியில் பஞ்சாபின் உஞ்சி பஸ்ஸி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:-

காலை 7.25 மணிக்கு காஷ்மீரின் கதுவாவில் இருந்து ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில் காலை 9 மணி அளவில் பஞ்சாபின் உஞ்சி பஸ்ஸி ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு ஓட்டுநர் இல்லாமல் ரயில் ஓடியுள்ளது. சில இடங்களை சுமார் 100 கி.மீ. வேகத்தில் ரயில் கடந்து சென்றுள்ளது. ரயில் போக்குவரத்தை நிறுத்தியது, அனைத்து ரயில்வே கேட்டுகளையும் மூடியது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் விபத்து, உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

பஞ்சாப் போலீஸார் வழிநெடுக தண்டவாளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மரத் தடுப்புகள் மற்றும் மணல் மூட்டைகள் மூலம் சரக்கு ரயிலின் வேகத்தை குறைத்து அதனை தடுத்து நிறுத்தினோம். முதல் கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கவனக்குறைவால் சரக்கு ரயில் தானாக ஓடியிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்தப்படும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.