தமிழக மீனவர்கள் பிரச்னைகளை எனது கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது: மன்சூர் அலிகான்!

தமிழக மீனவர்களை இலங்கை துன்புறுத்துகிறது. இதுபோன்ற பிரச்னைகளை எனது கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் அரசியல் கட்சி நடத்தி வந்தார். அண்மையில் குடியரசு தினத்தையொட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேசிய அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான். தான் நடத்தி வந்த தமிழ் தேசிய புலிகள் அமைப்பை, ஜனநாயக தேசிய புலிகள் என மாற்றுவதாக அறிவித்தார். அதன்படி, தனது ஜனநாயக தேசிய புலிகள் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் மன்சூர் அலிகான். டெல்லிக்கு சென்று இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தனது கட்சி பெயரை பதிவு செய்தார் மன்சூர் அலிகான். இக்கட்சியின் முதல் மாநாடு, கட்சி அறிமுகக் கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வாக்கு இயந்திரங்களை ஒழித்து வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேடைக்கு வந்த மன்சூர் அலிகான், மேடையில் குப்பை கிடந்ததை பார்த்து, துடைப்பத்தை கொண்டு வாருங்கள் எனச் சொல்லி, அவரே பெருக்க ஆரம்பித்தார். கட்சியினர் கேட்டும் துடைப்பட்த்தை கொடுக்காமல் தானே மேடையை சுத்தம் செய்தார்.

அதைத்தொடர்ந்து மைக் பிடித்து பேசத் தொடங்கிய மன்சூர் அலிகான், “வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு.. வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு” என பாரதியார் பாடலை ராகம் போட்டுப் பாடி தனது பேச்சைத் தொடங்கினார். அவர் பேசியதாவது:-

நடிகராக நான் கட்சி தொடங்கவில்லை. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே மக்களுக்காக நான் போராடி இருக்கின்றேன். சினிமா கதாநாயகர்கள் அரசியலுக்கு வந்தால் ஸ்ட்ரெய்ட்டா சி.எம். தான்.. இந்த வில்லன்களுக்கு எல்லாம் எதுவும் கொடுக்க மாட்டீர்களா?. 2014ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் துணையுடன் ஆட்சிக்கு வந்தார்கள். 2019லும் தகிடுதத்தம் செய்து ஆட்சியில் அமர்ந்தார்கள். மாற்றி மாற்றி ஓட்டு போடுவார்கள். ஆனால், இவர்கள் 3வது முறையும் ஆட்சிக்கு வருவேன் என நிற்கிறார்கள். ஓட்டுச் சீட்டு முறை வரும் வரை இப்படித்தான் செய்து கொண்டிருப்பார்கள்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மடிப்பிச்சை எடுத்தாவது போட்டியிடுவேன். எளியவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதே எங்களின் நோக்கம்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை தங்களது கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டு தெரிவிப்போம். தமிழக மீனவர்களை இலங்கை துன்புறுத்துகிறது. இதுபோன்ற பிரச்னைகளை எனது கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.