வரவு பற்றாக்குறையாக இருக்கும்போது இலவசம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?: சரத்குமார்

தமிழக அரசின் வரவு பற்றாக்குறையாக இருக்கும்போது, இலவசங்கள் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் கும்பகோணத்தில் நேற்று சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் உயர்மட்ட குழுவினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அவற்றை பரிசீலனை செய்து இறுதி முடிவெடுக்க வேண்டும். ஒற்றைக் கருத்து இருந்தால் விரைவாக முடிவு எடுக்கலாம். ஆனால் தற்போது ஒற்றைக் கருத்து ஏற்படவில்லை.

சமத்துவ மக்கள் கட்சி 16 ஆண்டுகளைக் கடந்து 17-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நாங்கள் எடுக்கும் முடிவு வெற்றி பெறக்கூடியதாக இருக்க வேண்டும். தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம்தான் வர இருக்கிறது. எனவே கூட்டணி குறித்து தீர ஆலோசித்து பொறுமையாக முடிவு எடுக்க உள்ளோம்.

நடிகர் விஜய் 2026-ல் நடைபெறும் தேர்தலுக்குத்தான் வருவதாக அறிவித்துள்ளார். அப்படி இருக்கும்பட்சத்தில் தற்போதைய அரசியலில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் எனக் கூற முடியாது. தமிழகத்துக்கு 8.33 லட்சம் கோடி கடன் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வரவு குறைவாகவும், செலவு அதிகமாகவும் இருப்பது தான். வரவு பற்றாக்குறையாக இருக்கும்போது, இலவசங்கள் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்என தெரியவில்லை. தமிழக மக்கள்கடன் சுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.

தொழில் வளம் பெருக்க வேண்டும். புதிய தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். வரவு அதிகரிக்க உற்பத்தியை பெருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஆனால், தொழில் வளத்தைப் பெருக்கி வருமானத்தை உயர்த்தும்திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. நம்முடைய கடனை தீர்ப்பதற்கான எந்த ஒரு முற்போக்கான திட்டத்தையும் அரசு தீட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.