லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக வதந்தி பரப்பிட்டாங்க: அன்புமணி

லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் தகவல்கள் உண்மையில்லை என்றும், அதிகாரப்பூர்வமாக நாங்கள் கூட்டணி குறித்து அறிவிக்கும் வரை எந்த செய்தி வந்தாலும் நம்ப வேண்டாம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது. வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் தேர்தல் களம் கொதிக்க ஆரம்பித்து உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மக்களவை தொகுதியும் என இரு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு விட்டது. ஏனைய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்ட அதிமுக மெகா கூட்டணி அமைக்கப்படும் எனக் கூறி வருகிறது. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த மாத துவக்கத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற வேண்டும் என்ற விருப்பத்தை சிவி சண்முகம் வெளிப்படுத்தியதாக சொல்லப்பட்டது. அதன்பிறகு திரைமறைவு பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. நேற்று முன் தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக எம் .எல்.ஏக்கள் சந்தித்தாக தகவல் பரவியது. எனினும் பாமக எம்.எல்.ஏக்கள் இதை மறுத்தனர். இதற்கிடையே, அதிமுக – பாமக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் 7 தொகுதிகள் வரை பாமகவிற்கு ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

இந்த நிலையில், கூட்டணி தொடர்பாக பரவி வரும் தகவல்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மறுத்துள்ளார். மேலும் “அதிகாரப்பூர்வமாக நாங்கள் கூட்டணி குறித்து அறிவிக்கும் வரை எந்த செய்தி வந்தாலும் நம்ப வேண்டாம்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வடலூரில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

கூட்டணி தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை. அத்தனையும் வதந்திகள். ஊடகத்துறை புனிதமான துறை. உங்களுடைய புனிதத்தை கெடுத்துக்கொள்ளாதீர்கள். பாமக அங்கே பேசியது.. இங்கே பேசியது.. இது முடிந்துவிட்டது.. அது முடிந்துவிட்டது என்றெல்லாம் வரும் செய்திகள் பொய்யான செய்தி. நாங்கள் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் எங்களுடைய நிலைப்பாட்டை உங்களிடம் தெரிவிப்போம். அதுவரை தயவு செய்து பொறுத்து கொள்ளுங்கள். கற்பனைக்காக செய்திகளை திரித்து வெளியிட வேண்டாம். உங்களுடைய அவசரத்திற்காக எங்களால் செயல்பட முடியாது. மீண்டும் நான் சொல்வது என்னவென்றால் இன்னும் ஓரிரு வாரங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வமாக நாங்கள் கூட்டணி குறித்து அறிவிக்கும் வரை எந்த செய்தி வந்தாலும் நம்ப வேண்டாம். இவ்வாறு அன்புமணி கூறினார்.