மோதல் காரணமாக மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை. இது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடி நிவாரணமாக இருக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் முதலில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது. பின்னர் பொதுமக்கள் கொல்லப்பட்டு வந்த நிலையில், போர் நிறுத்தம் தேவை என குரல் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில்தான் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக ஜெய்சங்கர், “மோதல் காரணமாக மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை. இது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடி நிவாரணமாக இருக்கும். அதேவேளையில் பயங்கரவாதம் மற்றும் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டியதில்லை” என்றார்.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 55-வது செசன் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த வரும் அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை சேர்ந்த 10 ஆயிரம் பேரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளார்.