சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரெயிலும் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. டார்ச் லைட் ஒளியின் மூலம் ரெயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரெயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் ரெயில் விபத்தை தடுத்துள்ளனர். சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம் ‘எஸ்’ – வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், 25-2-2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை -கொல்லம் ரெயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா- வடக்குத்தியாள் தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்பு பயணிகள் ரெயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரெயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, ரெயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் ரெயில் விபத்தை தடுத்துள்ளனர்.
உடனடியாகத் தகவலறிந்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரெயிலும் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரெயிலை நிறுத்திய சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.