கார்த்தி சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை!

சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் பெற்ற வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டின் கீழ் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் மான்ஸா என்ற இடத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது 1,980 மெகாவாட் திறனுடைய மின்திட்டமாகும். சீனாவின் ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக் ஷன் கார்ப் என்ற நிறுவனம் இந்த நிறுவனத்துக்கான ஒப்பந்த பணிகளை மேற்கொண்டது. இதற்காக 260 சீனர்களுக்கு விசா வழங்கப்பட்டது. 260 சீனர்களுக்கு விசா வழங்க காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ரூ50 லட்சம் லஞ்சமாக பெற்றார் என்பது சிபிஐ வழக்கு. 2011-ல் கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது சீனர்களுக்கு விசா வழங்க ரூ50 லட்சம் பெற்றார் என்கிறது சிபிஐ.

சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட இந்த வழக்கின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் பெற்றார்.

சிபிஐ வழக்கின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. ஐ.என்.எக்ஸ் மீடியா. ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளிலும் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் பெற்றதில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் 3-வதாகவும் வழக்கு பதிவு செய்தது அமலாக்கதுறை. இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் கடந்த 25-ந் தேதி அமலாக்கத்துறை சார்பில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் கார்த்தி சிதம்பரம், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 16-ந் தேதி நடைபெற உள்ளது.