கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் மார்ச் 4-ந்தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அம்மாநிலத்தின் இரண்டு மந்திரிகளை அமலாக்கத்துறை கைது செய்தது. இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அம்மாநில முதல்வரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை தனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம். நான் எந்த தவறும் செய்யவில்லை என கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வருகிறார்.
கெஜ்ரிவாலை கைது செய்து ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத்துறை மூலம் பா.ஜனதா அழிக்க பார்க்கிறது என ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. மேலும் சோதனை என்ற பெயரில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, விசாரணை என்ற பெயரில் அவரை கைது செய்வதுதான் அமலாக்கத்துறையின் குறிக்கோள். இதன் மூலம் மக்களவை தேர்தல் பிரசாரத்தை பா.ஜனதா முடக்க நினைக்கிறது என்றும் குற்றம்சாட்டியது.
ஆறு முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஏழாவது முறையாக சம்மன் அனுப்பியது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, எப்படி சம்மன் அனுப்ப முடியும் என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் 8-வது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் மார்ச் 4-ந்தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நீதிமன்றம் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், மார்ச் 16-ந்தேதி நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.