ஸ்டெர்லைட் ஆலை மூடல் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, ஆலை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், “ஆலை கழிவுகள் குறித்த புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி வருகிறது. இதனால்தான் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மாசு மட்டுமல்லாமல், சல்பர் டை ஆக்சைடு கசிவும் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்
ஆலையில் இருந்து வெளியேறும் கசடுகளில் மாசு ஏற்படுத்துபவை மற்றும் மாசு ஏற்படுத்தாதவை என இரு வகைகள் உள்ளன. இதனால் அனைத்து கழிவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் காணப்படும் கசடுகள் மாசு எற்படுத்துபவை என்பது ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது.

கொட்டபட்டுள்ள தாமிர கசடுகளில் ஆர்சனிக் அதிக அளவில் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆலையில் இருந்து கொட்டப்பட்ட கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுகள் மக்கள் பயன்படுத்தும் நீரில் கலந்துள்ளதும் உறுதியாகி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதிகளில் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுசூழல் அமைச்சகமும் இந்த நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், வரையறுக்கப்பட் அளவுக்கு மேலான மாசு வெளியாவதை ஏற்க முடியாது. உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

வேதாந்தா நிறுவனத்தின் செயல்பாடுகளால் சர்வதேச அளவில் அந்நிறுவனம் செயல்படுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஆலை ஏற்படுத்திய பாதிப்பு தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். தொடர்ச்சியான விதி மீறல்களையே இந்நிறுவனம் செய்து வருகிறது. எனவே தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான பாதிப்பை விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி பிறப்பித்த உத்தரவு மிகவும் சரியானது” என்று வாதிட்டார்.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான எதிர் தரப்பினரின் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறோம். ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதை மறுக்கவில்லை. ஆனால், அதனை முழுவதுமாக கட்டுப்படுத்தி எந்த சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படாமல் தடுத்துள்ளோம். மேலும், ஆலையிலிருந்து வாயு கசிவால் காற்று மாசு ஏற்பட்டதாகவும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறுவதற்கு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லை.

ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஆலை வளாகத்துக்குள்தான் உள்ளது. அது எந்த வகையிலும் நச்சுத்தன்மைக் கொண்ட ஆபத்தை விளைவிக்கும் கழிவுகள் கிடையாது. ஜிப்சம் கழிவுகள் 40 ஏக்கர் பரப்பளவில் 3 மீட்டர் ஆழத்தில் குளம் வெட்டி அதனுள் விடப்படுகிறது. இந்த ஜிப்சம் கழிவுகளை சிமெண்ட் ஆலைகள் எடுத்துச் செல்கின்றன. அதன்மூலம் கிடைத்த வருமானமும் அதற்கான சான்றுகளும் உள்ளன. எனவே, ஜிப்சம் கழிவுகள் அகற்றப்படாமல், பொது வெளியில் கொட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது.

அதேபோல CPCB, இன்டஸ்ட்ரீஸ் டெக்னாலஜி ரிசர்ச் மையம், நீரீ அறிக்கையில், தாமிரக் கசடுகள் என்பது ஆப்தானவை கிடையாது என்று கூறியுள்ளன. இந்த தாமிரக் கசடுகள், உலக அளவில் சாலைகள் அமைப்பதற்கும், ஆறுகளின் கரைகளை பலப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. இக்கழிவுகளை, தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளில் NHAI-யும் பயன்படுத்துகிறது.

கடலுக்கு அருகில் இருக்கும் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் என்பது குடிக்கும் அளவுக்கு தூய்மையானதாக இருக்க வேண்டும் எனக் கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்?ஆலையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தபோது சோடியம் குளோரைடு அளவு அதிகளவில் இருந்தது. காரணம், கடலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரில் உப்பு மற்றும் பிற தாதுக்களின் அளவு அதிகமாகவே இருக்கும். இது ஆலை தொடங்குவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதற்கு ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம் என்று எப்படி கூற முடியும்?

அரசியல் காரணங்களுக்காகவே, இந்த ஆலை மூடப்பட்டது. நிபுணர்கள் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், பல நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களை அமைத்து ஆய்வு செய்த பின்னர், அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து ஆலையை இயக்கலாம் என உத்தரவிட்டது. ஆனால் எந்த நிபுணத்துவமும், நிபுணர்களும் இல்லாத உயர் நீதிமன்றம் ஆலையை மூடிய உத்தரவு சரியானது என்று கூறுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்? எனவே, ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதியளித்து உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்ததில் எந்தவிதமான வரம்பு மீறலும் இருந்ததாக நாங்கள் கருதவில்லை. ஆலையில் நடந்துள்ள விதிமுறை மீறல்களின் அடிப்படையில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் தாக்கல் செயய்ப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.