கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன்: அண்ணாமலை!

கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை என பாஜக வேட்பாளர் அண்ணாமலை சொன்னதைக் கேட்டு சட்டென ஷாக் ஆனார்கள் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுகவில் ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று தங்களது வேட்பு மனுக்களை தக்கல் செய்தனர். முன்னதாக கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயிலில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அண்ணாமலை சென்றார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், பாஜக நிர்வாகிகள் அமர் பிரசாத் ரெட்டி, ஜிகே நாகராஜ், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் அண்ணாமலையுடன் ஊர்வலமாக வந்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-

கோவை மக்கள் அனைவரும் என் மீது அன்பை பொழிகிறார்கள். கோவையில் ஆதிக்கம் செலுத்தி வந்த சக்திகளுடன் தான் பா.ஜ.க போட்டி. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பா.ஜ.க எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டசபையில் 4 முறை பேசியுள்ளார், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால், கோவை நகர் வளர்ச்சி அடையக்கூடாது என மாநில அரசு கங்கணம் கட்டி வருகிறது. கோவை வளர்ச்சிக்கு திமுகவும், மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.,யும் தடைக்கல்லாக இருந்தனர். தொழில் துறையினரின் கோரிக்கையை கோவை எம்.பி பேசியிருக்கிறாரா? கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேவை என்பதை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்.

கோவை காவல் தெய்வம் கோனியம்மனை வணங்கிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை. கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன். நான் எப்போதும் அந்த மாதிரி ஆள் கிடையாது. அண்ணாமலை ஜெயிக்க வேண்டும் என வேண்டும் ஆள் இல்லை. கோவை மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்று மட்டுமே கோனியம்மன் கோவிலில் வழிபாடு செய்தேன். கரூரில் இருந்து கல்லூரி படிக்க வந்தபோது, கோவை தான் என்னை பக்குவப்படுத்தியது. இங்கள்ள 60 சதவீத மக்கள் எங்களுக்கு ஓட்டளிப்பார்கள். சிறுபான்மையினர் பெரும்பான்மை என்கிற வார்த்தைகளை பயன்படுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அனைவரையும் கோவையின் மக்களாக மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.