தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்: சத்யபிரதா சாஹு!

“தமிழகத்தில் கடந்த 22 ஜனவரி அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் நேற்றைய நிலவரப்படி 3.06 கோடி ஆண்கள், 3.16 கோடி பெண்கள் என 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைய உள்ள நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 3.06 கோடி பேர் ஆண்கள், 3.16 கோடி பேர் பெண்கள் என 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் 39 உள்ளது.

தமிழகத்தில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10,90,547 பேர் உள்ளனர். மாற்று திறனாளி வாக்காளர்கள் 4,61,730 பேர் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6.13 லட்சம் பேர் உள்ளனர். தேர்தல் நடத்தும் பணியில் மொத்தம் 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதல்கட்ட பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பயிற்சி ஏப்ரல் 7-க்குள் முடிக்க வலியுறுத்தியுள்ளோம்.

39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 190 கம்பெனி ராணுவம் பயன்படுத்தப்படவுள்ளன. நேற்றுவரை ரூ.68 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம். சி-விஜில் செயலி வாயிலாக அளிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமீறல் பற்றி புகார் அளிப்பவர்கள் தங்கள் விவரத்தை மறைத்துவிட்டு புகார் அளிக்கலாம். 648 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. தனியார் கட்டிடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு 13ம் தேதிக்குள் விநியோகிக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு அதிகாரிகள் கொண்டு பூத் சிலிப் விநியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.