புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த முந்தைய அதிமுக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து, தற்போதைய திமுக அரசு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2006-11 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக நீதிபதி ரகுபதி இருந்தபோது, அந்த ஆணையம் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, முன்னாள் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.
அந்த சம்மனை ரத்து செய்யக்கோரியும், ஆணையம் அமைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். அப்போது ஆணைய சம்மனுக்கும், விசாரணை நடைமுறைகளுக்கும் தடைவிதிக்கபட்டது. அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆணையங்கள் அமைக்கப்படுவதும், அதற்கு மக்களின் பணம் வீணடிக்கப்படுவதாகவும் அதிருப்தி தெரிவித்தார். அப்போது ஆணையத்தை நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் கருணாநிதி ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானதையடுத்து, அவர் வழக்கு மட்டும் முடிக்கபட்ட நிலையில், ஆணையத்தை எதிர்த்த தங்கள் வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஸ்டாலின், துரைமுருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவற்றை ஏற்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விசாரணை ஆணையம் என்பதே கண் துடைப்பு நாடகம் என்று கருத்து தெரிவித்ததுடன், ஆணையம் திரட்டிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை தமிழக அரசு பரிசீலித்து குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் குற்றவியல் விசாரணை நடத்தலாம் என பரிந்துரைத்தார்.
நீதிபதி பரிந்துரையின் அடிப்படையில், அவரது உத்தரவின் அடிப்படையில் புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பாக நீதிபதி ரகுபதி ஆணையம் விசாரித்த மற்றும் திரட்டிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புதுறைக்கு மாற்றி 2018 செப்டம்பர் 24ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அரசாணையை அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய செப்டம்பர் 28ஆம் தேதி தமிழக அரசு கடிதம் அனுப்பியது. இந்த அரசாணையையும், கடிதத்தையும் ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, விசாரணை ஆணையம் முழுமையாக விசாரணையை முடித்து அதன் பரிந்துரைகளை தமிழக அரசிடம் அறிக்கை அளிக்காத நிலையில், அது திரட்டிய ஆவணங்கள் அடிப்படையில் குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்ற ஆணையங்கள் சட்டத்தை சுட்டிக்காட்டி செப்டம்பர் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாக தீர்ப்பளித்துள்ளார். மேலும் ஆவணங்களை பரிமாற்றம் செய்ய பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய செப்டம்பர் 28ஆம் தேதி அனுப்பிய கடித போக்குவரத்தையும் ரத்து செய்வதாக நீதிபதி புஷ்பா சத்யநாராயணா தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து தமிழக அரசுத்தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக தலைமையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு மேல்முறையீடு மனுக்களை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
தன் புகாரில் முறையாக விசாரணை நடத்தாமல், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற அரசு ஆர்வம் காட்டுவதாக கூறி, அரசின் மேல்முறையீடு வழக்குகளில் தன்னை இணைக்க கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களில் பிப்ரவரி 6ஆம் தேதி நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய தமிழக அரசின் மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இன்று (மார்ச் 28) தீர்ப்பளித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், வழக்கை நடத்தும் படி நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது என கூறி, வழக்கு வாபஸ் பெறப்பட்டதை ஏற்று, மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதால் இடையீட்டு மனுதாரர் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை. ஜெயவர்தன் மனுவை முடித்துவைத்தும் உத்தரவிட்டனர்.