140 கோடி மக்கள் காங்கிரஸை நிராகரித்ததில் ஆச்சரியமில்லை: மோடி!

நீதித்துறையின் மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தையடுத்து பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளார்.

எக்ஸ் வலைத்தளத்தில் வழக்குரைஞர்களின் கடிதத்தைப் பகிர்ந்துள்ள மோடி அந்த பதிவில், “மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின் பழமையான கலாச்சாரம். 5 ஆண்டுகளுக்கு முன்னர் ‘உறுதியான நீதித்துறை’ கேட்டது அவர்கள்தான். வெட்கமே இல்லாமல் அவர்களின் சுயநலனுக்காக மற்றவர்களிடம் உறுதியை கேட்பதும், நாடு என வரும்போது அதிலிருந்து விலகவும் செய்வார்கள். 140 கோடி மக்கள் காங்கிரஸை நிராகரித்ததில் ஆச்சரியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

‘அபாயத்தில் நீதித்துறை – அரசியல் மற்றும் தொழில்முறை அழுத்தத்தில் இருந்து நீதியைக் காத்தல்’ என்கிற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள கடித்தத்தில் 600 வழக்குரைஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ‘வகுப்புவாத குழு’ இந்திய நீதித்துறையில் அழுத்தம் கொடுக்க முயற்சி செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.