வேலூர் வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு!

வரும் லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடும் நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் அவர் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதி வேட்பாளராக அவர் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். மன்சூர் அலிகான் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. இதன்மூலம் வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் மன்சூர் அலிகான் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மேலும் அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னதாகவே மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பிரசார கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு முறையான அனுமதி பெறவேண்டாம். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை என்பது எடுக்கப்படும். இந்நிலையில் தான் வேலூர் பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சுற்றிய சுவர்களில் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தொடர்பான விளம்பரங்கள் மற்றும் கட்சியின் அடையாளம் ஓவியமாக பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி பொய்கை கிராம நிர்வா கஅலுவலர் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வேலூர் வேட்பாளராக இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.