வருமான வரித்துறை நோட்டீஸ் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் விளக்கம்!

“வருமான வரித்துறை நோட்டீஸ் தொடர்பாக கட்சியின் தணிக்கையாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித் துறை ரூ.11 கோடி வரிப் பாக்கி நோட்டீஸ் கொடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கட்சி நண்பர்கள், பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. வருமானவரித் துறைக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வரி விலக்கு தொடர்பான கடிதப் போக்குவரத்து இருந்து வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 -பிரிவு 29 ஏ-ன்படி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். இதன் மூலம் வருமான வரிச் சட்டம் 13ஏ பிரிவுப் படி வரிவிலக்கு பெறுவதற்கான சட்டபூர்வ உரிமை பெற்றுள்ளது. இதனை ஏற்று வருமான வரித்துறை வரிவிலக்கு வழங்கி இருக்க வேண்டும். அப்படி வரி விலக்கு கொடுக்கப்பட்டிருந்தால் கட்சிக்கு வரிப்பாக்கியும் இல்லை, அதன் மீது அபராதமும் வட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை. கட்சிக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற முறையீடு தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மாநில அலுவலகக் கட்டிடம் தொடர்பான கடன் தவணை, வாடகை வருமானம் மீது ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட வரியினங்கள் அனைத்தையும் முறையாகவும் காலம் தவறாமலும் செலுத்தி வருவதை மறைத்து வருமான வரித்துறையின் நோட்டீஸ் குறித்து பரப்பப்படும் செய்தி தேர்தல் ஆதாயம் தேடும் குறுகிய பார்வை கொண்டது என்பதை பொதுமக்களும், வாக்காளர்களும் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நம்பிக்கை கொண்டுள்ளது. வருமான வரித்துறை நோட்டீஸ் தொடர்பாக கட்சியின் தணிக்கையாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.