2016-ல் கருணாநிதி சொல்லியும் யாருக்கு ஓட்டு போட்டீங்க: உதயநிதி கேள்வி!

மதுராந்தகத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், அங்கு நின்ற மக்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது மதுக்கடைகள் மூடப்படும் என்று திமுக 2016-ல் வாக்குறுதி அளித்த போதும் அதிமுகவிற்கு தானே ஓட்டு போட்டீர்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சுக்களால், விறு விறுப்புக்கு பஞ்சம் இன்றி தேர்தல் பிரசாரம் சென்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக திமுக – அதிமுக இடையே வார்த்தை மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், இன்று மதுராந்தகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2016-ஆம் ஆண்டு மதுக்கடைகள் மூடப்படும் என்று கருணாநிதி வாக்களித்த போது நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து கொண்டு இருந்த போது, கூட்டத்தில் இருந்தபொதுமக்கள் ஒயின்ஷாப் மூட வேண்டும் என்று சொல்லி வந்தனர். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “டாஸ்மாக் மூட வேண்டுமா? 2016-ல் கருணாநிதி ஆட்சிக்க்கு தேர்ந்தெடுக்க எல்லா ஒயின்ஷாப்பையும் மூடிவிடுகிறேன் என்று சொன்னார்.. ஓட்டு போட்டீங்களா.. 2016- தேர்தலின் போது கருணாநிதி வாக்குறுதி கொடுத்தார். திமுக ஆட்சிக்கு வந்ததது என்றால் எல்லா ஒயின்ஷாப்பையும் மூடி விடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார். ஓட்டு போட்டீங்களா.. யாருக்கு ஓட்டு போட்டீங்க.. அதிமுகவிற்கு தானே ஓட்டு போட்டீங்க.. என்று சிரித்தபடியே கூறினார்.

2016-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று வாக்குறுதி அளித்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அதிமுக ஆட்சி அமைந்தால் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்ற வாக்குறுதியை கூறினார். அந்த தேர்தலில், பூரண மதுவிலக்கு என்ற கோஷம் எதிர்க்கட்சிகள் மத்தியில் பிரதானமாக வைக்கப்பட்டது. எனினும் அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.