கட்டாயத்தால் அரசியல்வாதி ஆனவர் ராகுல் காந்தி: கங்கனா ரணாவத்!

“காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சொந்த விருப்பத்துக்கு மாறாக கட்டாயத்தினால் அரசியல்வாதியாக மாறியுள்ளதாக தெரிகிறது” என்று நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் கங்கனா. அவர் கூறியதாவது:-

ஒரு விஷயத்தை அவரால் (ராகுல் காந்தி) செய்ய முடியுமா இல்லையா என்பதை பற்றி கவலை இல்லாம் தொடர்ந்து அவர் மீது அந்த விஷயம் திணிக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அவர் 60 வயதை அடைந்து விடுவார். ஆனாலும், இன்னும் அவர் இளம் தலைவர் என்றே அறிமுகப்படுத்தப்படுகிறார். தனது சொந்த சூழ்நிலைகளால் அவர் பாதிக்கப்படுவதாக நினைக்கிறேன். அவர் தனது சொந்த விருப்பத்துக்கு மாறாக கட்டாயத்தினால் அரசியல்வாதியாக மாறியுள்ளதாக தெரிகிறது. வாரிசு முறையால் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர் வேறு ஏதாவது செய்ய விரும்பியிருந்தால் என்னச் செய்வது? உதாரணமாக, அவர் நடிகராக விரும்பியிருந்தால், அவர் இப்பாேது நடிகராகி இருக்கலாம். சினிமா உலகில் தங்கள் பெற்றோர்களால் அதே தொழிலில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட பலரை நான் பார்த்திருக்கிறேன். அதனால் அவர்களது வாழ்க்கையே பாழானது.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரையும் எனக்கு பிடிக்கும். அவர்கள் இருவரும் ஒரு சிக்கலான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தகுதியானவர்களே. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. அவர்களின் அம்மா (சோனியா காந்தி) அவர்களை வழிநடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.