கருத்து கணிப்புகள் பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதற்கு சமமானது: பினராயி விஜயன்!

கட்டணம் வசூலித்துவிட்டு செய்தி வெளியிடுவதற்கு இணையானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் நிச்சயம் முன்னிலை வகிக்கும் என்று வந்திருக்கிறதே என கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

நம்பகத்தன்மையற்ற செய்திகளையும் சார்புடைய செய்திகளையும் கட்டணம் வசூலித்துவிட்டு வெளியிடுவது போன்று சில கருத்துக்கணிப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன. இப்படித்தான் கடந்த 2021ஆம் ஆண்டிலும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பலஊடகங்கள் வெளியிட்டன. ஆனால், கேரள மக்கள் அதனை நிராகரித்துவிட்டு இடதுசாரி கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தனர். தற்போது வெளிவந்திருக்கும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு கட்டண வசூல் செய்தி போன்றதா என்று மக்களே கேட்கத் தொடங்கிவிட்டனர்.

மக்கள் மயங்க மாட்டார்கள்: இவ்வாறு, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை வெளியிடும் ஊடகங்கள் அந்த ஆய்வில்எத்தகைய வழிமுறை பின்பற்றப்பட்டது, எத்தனை பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது, முடிவுகள் எப்படி கணிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை இதுவரை வெளியிடவே இல்லை. ஆகையால் இத்தகைய கருத்துக் கணிப்புகள் மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் தயாரிக்கப்படுகின்றன. கேரள மக்கள் இதற்கெல்லாம் மயங்கமாட்டார்கள். அவர்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் கருத்துக்கணிப்பை நிராகரித்துவிட்டு எல்டிஎஃப் கூட்டணிக்கு வாக்களித்தது போன்றே இம்முறையும் எங்களுடன் உறுதுணையாக நிற்பார்கள். போலி செய்திகளையும் போலி கருத்துக்கணிப்புகளையும் சார்ந்து இல்லை கேரள மக்களின் அரசியல் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.