தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களித்தோருக்கு நன்றி: ராமதாஸ்!

“தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த தேர்தலில் கிடைத்த முடிவுகளை மாற்ற வேண்டும்; மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் எண்ணத்தில் பெருமளவிலான மக்கள் பாமக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக உணர முடிகிறது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் 18-வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் மக்கள் கடும் வெயிலையும் கடந்து ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றி சென்றுள்ளனர்.தமிழகத்தின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் சராசரியாக 70 விழுக்காட்டுக்கும் கூடுதலான வாக்குகள் பதிவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவின் அளவு, வாக்காளர்களின் உடல் மொழி, பொதுவான மக்களின் மனநிலை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த தேர்தலில் கிடைத்த முடிவுகளை மாற்ற வேண்டும்; மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் எண்ணத்தில் பெருமளவிலான மக்கள் பாமக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக உணர முடிகிறது.

தமிழகத்தில் மக்களவை பிரதிநிதித்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்காக மிகச் சிறந்த முறையில் களப்பணியாற்றிய அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும், ஆதரவு தந்த அமைப்புகளுக்கும் பாமக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.