அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு!

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் மார்ச் 15 ஆம் தேதி கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, இதே வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கெஜ்ரிவால்.

கவிதாவின் ஜாமீன் மனுவை மே 2-ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவிருக்கிறது. அதோடு, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய கெஜ்ரிவாலின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது, இருவரும் திஹார் சிறையில், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவரும் மே 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட இருக்கின்றனர்.