“பதஞ்சலி நிறுவனம் சார்பில் செய்தித்தாள்களில் வெளியான மன்னிப்பு விளம்பரத்தின் அளவு மிகவும் சிறியதாக உள்ளது. அவர்கள் பத்திரிகையில் எந்த அளவு பிரசுரித்தீர்கள் என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். அதனால், அசல் விளம்பரங்களைக் கொண்டு வாருங்கள்” என்று பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டில் பதஞ்சலி நிறுவனத்தை தொடங்கினர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகளை அறிமுகம் செய்தது. இது தொடர்பாக பதஞ்சலி வெளியிட்ட விளம்பரத்தில், “அலோபதி மருத்துவத்தில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. எங்களது ஆயுர்வேத மருந்துகள் மூலம் கொரோனா, சர்க்கரை நோய், ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், தவறான விளம்பரங்களை வெளியிடுவதை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அதன் பிறகும் அந்த நிறுவனம் அடுத்தடுத்து விளம்பரங்களை வெளியிட்டது. இதையடுத்து பதஞ்சலி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
பதஞ்சலி வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அமானுதுல்லா அமர்வு முன்பு இன்று (ஏப்.23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகினார். பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா மன்னிப்புக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறினார். அதற்கு நீதிபதிகள் மன்னிப்பு முன்பே கேட்டிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை என்றனர். அதற்கு ரோஹத்கி, “ரூ.10 லட்சம் செலவில் மன்னிப்பு கோரி 67 செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிட்டுள்ளனர்” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “மன்னிப்பு முதன்மைப்படுத்தி பெரிய அளவில் வெளியிடப்பட்டுள்ளதா? பதஞ்சலி விளம்பரங்களைப் போல் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ரோஹத்கி “மனுதாரர்கள் நிறைய செலவழித்துள்ளனர்” என்றார். அதற்கு நீதிமன்றம் “அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்றது.
கூடவே, “இந்திய மருத்துவ சங்கத்திடம் ரூ.1000 கோடி அபராதம் கேட்டு ஒரு மனு தாக்கலாகியுள்ளது. இது பதஞ்சலி சார்பில் யாரோ ஒருவர் தாக்கல் செய்யவைக்கப்பட்டிருக்கிறார் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்” என்று நீதிபதிகள் கூற, ரோஹத்கி அதற்கும் தன் கட்சிக்காரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். இதனையடுத்து வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பதாகக் கூறிய உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
அப்போது நீதிபதி கோலி, “இனி நீங்கள் அளிக்கும் விளம்பரத்தை வெட்டி எடுத்து எங்கள் கைகளில் கொடுக்கும் அளவுக்கு பெரிதாகக் கொடுங்கள். அவற்றைப் மைக்ரோஸ்கோப் வைத்து பார்க்கும்படி சிறியதாகக் கொடுக்காதீர்கள்.. எங்களுக்கு அசல் விளம்பரத்தைப் பார்க்க வேண்டும். இதுதான் எங்களின் வழிகாட்டுதல்” என்றார்.
முன்னதாக பதஞ்சலி நிறுவனம் தேசிய செய்தித்தாள்களில் அளித்த விளம்பரங்களில் “நாங்கள் நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மரியாதை கொண்டுள்ளோம். மீண்டும் தவறு செய்ய மாட்டோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.