நாம் கடவுள் ராமரை வணங்குவது ஏன்?: பிரியங்கா காந்தி!

நாம் கடவுள் ராமரை வணங்குவது ஏன்? என்பது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கமளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நாம் ராமரை வணங்குவது ஏன்? அவர் நேர்மையின் வழியில் நடந்து மக்களுக்காக சேவை புரிந்தார். மகாத்மா காந்தியடிகளும் இதே வழியைப் பின்பற்றினார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது கூட ஹே ராம் என்று முழக்கமிட்டார். ஆனால், இன்றைக்கு பொய்கள் புரையோடிப் போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. நம் முன்பு நாள்தோறும் அரங்கேற்றப்படும் நாடகங்களை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மக்கள் விரும்பாத அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இவை அனைத்தும் உங்கள் கண் முன்பே நடக்கிறது. ஆனால், நீங்கள் மெளனமாக இருக்கிறீர்கள். உங்கள் உரிமைகளைக் காத்துக்கொள்வதற்காக நீங்கள் போராட வேண்டிய இடத்துற்கு அழுத்தப்படுகிறீர்கள். நாங்கள் அதற்கு எதிராக களமிறங்கியுள்ளோம். நீங்கள் எப்போது களம் காண்பீர்கள். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகத்தின் ஹனுமன் பாடல் கேட்ட கடைக்காரர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஹனுமன் பாடல் கேட்பது காங்கிரஸ் ஆட்சியில் குற்றமாகியுள்ளதாகவும் ராஜஸ்தான் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராமரை வணங்குவது குறித்து பிரியங்கா காந்தி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.