எதிர்த்து பேசுபவர்களை கொல்ல துடிக்கிறது, பா.ஜ.க: மம்தா பானர்ஜி

எதிர்த்து பேசுபவர்களை பா.ஜனதா கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ துடிக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தன் மீதும், தன் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீதும் பா.ஜனதா குறி வைத்திருப்பதாக சமீபத்தில் குற்றம் சாட்டினார். இதற்கிடையே, அபிஷேக் பானர்ஜியின் வீட்டையும், அலுவலகத்தையும் உளவு பார்த்ததாக, மும்பையை சேர்ந்த ராஜாராம் ரிஜ் என்பவரை கொல்கத்தா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர், மும்பை தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹெட்லியை ஏற்கனவே சந்தித்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி, மம்தா பானர்ஜி பேசினார். ஹசன் நகரில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:-

பா.ஜனதா தனக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ விரும்புகிறது. அவர்களை இந்த உலகத்தை விட்டே அப்புறப்படுத்த நினைக்கிறது. தேர்தலில் வெற்றி பெறப்போவதாக உறுதியாக நம்பினால், பிறகு ஏன் எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்துகிறீர்கள்?.

ஒரு பா.ஜனதா தலைவர், குண்டு வெடிக்கும் என்கிறார். உங்களுக்கு மம்தா பானர்ஜி மீது கோபம் இருந்தால், என்னை கொல்லுங்கள். ஆனால், அபிஷேக் பானர்ஜியை கொல்ல திட்டமிடுகிறீர்கள். அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விட்டோம். அவர் அபிஷேக் பானர்ஜி வீட்டை உளவு பார்த்துள்ளார். சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்டு, நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அபிஷேக் பானர்ஜி நேரம் கொடுத்திருந்தால், அவரை கொலை செய்திருக்கக்கூடும். இவ்வாறு அவர் பேசினார்.