அருணாச்சல பிரதேசம் – சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு!

அருணாச்சல பிரதேசம் – சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் நெடுஞ்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் நெடுஞ்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலை-33 இல் ஹுன்லி மற்றும் அனினி நகரங்களுக்கு இடையேயான பகுதி சேதமடைந்துள்ளது. சாலையை சீரமைக்க மூன்று நாட்கள் ஆகும் என அருணாச்சல பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவு காரணமாக சீன எல்லை ஒட்டிய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கிடையேயான தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது.

அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, நிலச்சரிவால் ஏற்பட்ட இடையூறுகளை விரைவில் நிவர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளார். ஜனவரி 2023 இல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அருணாச்சல பிரதேசத்தில் ஒரு முக்கிய பாலம் உட்பட 28 முக்கியமான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திபாங் பள்ளத்தாக்கை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே சாலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.