சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்: அமெரிக்கா எச்சரிக்கை!

ரஷ்ய ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான பொருள்களை அந்த நாட்டுக்கு தொடா்ந்து விற்பனை செய்தால் சீனா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் அந்த நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை நேரில் சந்தித்து இந்த எச்சரிக்கையை விடுத்தாா்.

உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக இருதரப்பு வா்த்தகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாடுகளும் அவ்வப்போது பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் சீனாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்கு பல்வேறு தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய பிளிங்கன், அதிபா் ஷி ஜின்பிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினாா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பிளிங்கன் கூறியதாவது:-

அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கும் சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கும் சான் ஃபிரான்சிஸ்கோவில் கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு இரு தரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. போதை மருந்து கடத்தலைத் தடுப்பது, இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையிலான வா்த்தக ஒப்பந்தங்களை புதுப்பிப்பது போன்ற விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து இரு நாடுகளும் கூடி விவாதிக்கவிருக்கின்றன. இருந்தாலும், ரஷ்யாவின் ஆயுத உற்பத்தியை மேம்படுத்துவற்குத் தேவையான இயந்திரக் கருவிகள், மின்னணு பொருள்கள், நைட்ரோசெல்லுலோஸ் எனப்படும் வெடிபொருள் தயாரிப்புக்கு இன்றியமையாத பொருள், ஏவுகணை குண்டுகளை உந்திச் செல்லும் பாகம் ஆகியவற்றை அந்த நாட்டுக்கு மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா திகழ்வது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துகிறது.

உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை ரஷ்யா முன்னெடுத்துச் செல்வதற்கு சீனா ஏற்றுமதி செய்யும் கருவிகளும் சாதனங்களும் பெரிதும் உதவுகின்றன. இது உக்ரைனின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஐரோப்பாவின் நிலைத்தன்மைக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதிலுள்ள பிரச்னையை சீனா புரிந்துகொண்டு செயல்படாவிட்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.