ராஃபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியான ராஃபாவின் காஸா பகுதியை இஸ்ரேல் டாங்கி படை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர கைதிகள் விடுதலைக்கான உடன்படிக்கை இன்னும் நிறைவேறாத நிலையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை விரிவுப்படுத்தியது பிரச்னையை இன்னும் சிக்கலாக்கும் எனக் கருதப்படுகிறது. எகிப்து மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் மேற்கொண்டுவரும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல், இந்த உடன்படிக்கையானது தங்களின் கோரிக்கைகளை நிறைவு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது.

7 மாதங்களாக போர் தொடர்ந்துவரும் நிலையில் புதிய பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் போர் நிறுத்தம், சிறு ஆறுதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவத்தின் டாங்கிகள் 401-வது படைப் பிரிவு ராபா எல்லையில் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ராணுவம் தெரிவித்துள்ளது.

நிவாரண பொருள்கள் பிராந்தியத்திற்குள் நுழைவதற்கும் காஸாவிலிருந்து எகிப்துக்குள் மக்கள் நுழைவதற்குமான வழியாக ராஃபா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு கத்தாா், எகிப்து ஆகிய இரண்டு மத்திய கிழக்கு நாடுகள் பல மாதங்களாக பல்வேறுகட்ட பேச்சுவாா்த்தைகளை நடத்தியதன் பயனாய், போர் நிறுத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. மறுபுறம், மேற்கண்ட போா்நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், எகிப்து எல்லையில் அமைந்துள்ள ராஃபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ஆயத்தமாகியுள்ளது. இதையடுத்து, காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு சுமாா் 1 லட்சம் பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

ராஃபா நகருக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் அது மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும். இது எண்ணற்ற பொதுமக்கள் உயிரிழப்பதற்கு வழிவகுக்கும் என்று ஐ.நா. அகதிகள் நலப் பிரிவான யுஎன்ஆா்டபிள்யுஏ இஸ்ரேலின் இந்த உத்தரவைக் கண்டித்துள்ளது.

எனினும் அதைப் பொருட்படுத்தாமல், ‘ராஃபாவில் ஆயுதப் படையினருக்கு எதிராக நாங்கள் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தவிருப்பதால் பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராஃபாவில் இருந்து எங்கே செல்வது? என நிர்கதியாய் நிற்கும் அங்குள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கதறுகின்றனர். இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள கிழக்கு ராஃபாவிலிருந்து, ஏராளமானோர் தங்கள் உடைமைகளை ஏந்திக்கொண்டு சுமை வாகனங்கள், கார்கள், கழுதை பூட்டிய வண்டிகள் என தங்களிடமுள்ள அனைத்து வகையான வாகனங்களையும் பயன்படுத்தி அங்கிருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். பலர், நடந்தே வேறு இடங்களுக்குச் செல்வதையும் காண முடிகிறது என அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காஸாவில் உள்ள் மக்களுக்கக நிவாரணப் பொருள்கள், உதவிகள் செல்லும் முக்கிய வழிப்பாதையாக அமைந்துள்ள கிழக்கு ராஃபாவின் ‘ராஃபா எல்லைப் பகுதியை’ இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளதால், காஸாவுக்கான நிவாரணப் பொருள்கள் சென்றடைவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.