இலங்கையில் 19வது சட்டதிருத்தத்தை மீண்டும் கொண்டுவர ராஜபக்சே முடிவு

இலங்கை மக்களின் தொடர் போராட்டத்திற்கு பணிந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் 19வது சட்டதிருத்தத்தை மீண்டும் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்.

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலுக்கு இடையே நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மகிந்த ராஜபக்சே, நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு தீர்வுகாண அரசியலமைப்பில் நிச்சயம் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றார். தேவையான மாற்றங்களுடன் 19வது சட்டதிருத்தத்தை மீண்டும் அமல்படுத்துவது, குறுகிய கால தீர்வாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அதிபரின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 19வது சட்டதிருத்தம் 2015ல் ரணில் விக்ரமசிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 2019ல் அதிபரான கோத்தபய ராஜபக்சே, அந்த சட்டதிருத்தத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வீரியமடைந்து வரும் நிலையில், அதனை தணிக்க ஆட்சியாளர்கள் முயன்று வருகின்றனர். இதனிடையே அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனடியாக பதவி விலகக்கோரி 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று முதல் ஒரு வாரத்திற்கு போராட்டத்தில் இறங்கியுள்ளன.