ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளி வளாகத்தில் குண்டு வெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில், பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 6 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். தாலிபான் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சன்னி பிரிவினரான ஐஎஸ் பயங்கரவாதிகள் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று, மேற்கு காபூலில் உயர்நிலைப் பள்ளி உட்பட 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலுள்ளவர்கள் ஷியா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஐ.எஸ்., சன்னி பிரிவு பயங்கரவாதிகளின் இலக்குகளாக உள்ளனர் என காபூல் தளபதியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.