ராகுல் மீது அவதூறு வழக்கு: மனுதாரருக்கு நீதிமன்றம் 1000 ரூபாய் அபராதம்

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 1000 ரூபாய் அபராதம் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்டே என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தாணே நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என புகார்தாரர் குன்டே தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நிராகரித்த நீதிபதி, மனுதாரருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை எதிர்மனுதாரரான ராகுல் காந்திக்கு வழக்கு செலவுக்காக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளதெனவும், அன்றைய தினம் புகார்தாரரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்றும் ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தங்களை பிரபலப்படுத்தி கொள்வதற்காக, பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு தொடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த போக்கை தடுப்பதற்காக, வழக்கை தொடுத்துவிட்டு விசாரணையை ஒத்திவைக்கவோ, வழக்கை வாபஸ் வாங்கவோ கோரும் மனுதாரர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதிப்பது குறிப்பிடத்தக்கது.