நெல்லை பெண் எஸ்.ஐ.,க்கு கத்திக்குத்து: நேரில் சந்தித்த டிஜிபி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் மார்க்ரெட் தெரசா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆறுமுகம் என்ற நபர், உதவி ஆய்வாளரைக் கத்தியால் வெட்டியதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைத் தாக்கிய ஆறுமுகம் என்ற நபர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஆறுமுகம் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு மார்க்ரெட் தெரசா அபராதம் விதித்துள்ளார். அந்த பகையை மனதில் வைத்து கொண்டு நேற்று பணியில் இருந்தபோது கையில் இருந்த கத்தியால் மார்க்ரெட் தெரசாவை ஆறுமுகம் குத்தியுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த, முதல்வர் ஸ்டாலின், இச்சம்பவத்தில் காயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் மார்க்ரெட் தெரசாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மார்க்ரெட் தெரசாவை முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்த அவர், உடனடியாக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். அதற்காக காவல்துறையின் சார்பில் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “குடிபோதையில் ஆக்ரோஷமாக இருந்த குற்றவாளியை உடனடியாக மடக்கிப் பிடித்த மகளிர் காவலர் லட்சுமி, காவலர்கள் ரமேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் காவல்துறை சார்பில் பாராட்டுக்களும் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் குடிபோதையில் இருக்கும்போது நிறைய தகராறுகள் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மீது வழக்குகள் எதுவும் இல்லை. ஒரு வழக்குப்பதிவு செய்துவிட்டார்கள் என்பதற்காக ஒரு மாதம் கழித்து திட்டமிட்டு இதுபோல தாக்குதல் நடத்தியது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடிபோதையா அல்லது மனநிலை பாதிப்பா என்பது விசாரணையில் தெரியவரும்” என்றார்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 80 கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன. அதுவும் தென் மாவட்டங்களில் இந்த பழிக்குப்பழி கொலையெல்லாம் வழக்கமாகவே நடந்து கொண்டிருக்கும். ஆனால் கடந்த 8 மாதங்களாகவே அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.