கல்வி நிறுவனங்களில் மத அடையாள ஆடை: வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு!

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிய தடை விதிக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான கோபிநாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பள்ளி மாணவர்களிடம் வேறுபாட்டை களையும் நோக்கில் கடந்த 1960ஆம் ஆண்டில் மாணவர்களுக்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். இதுசம்பந்தமான விதிகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை எனவும், ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை மாணவ – மாணவிகள் அணிந்து வருவதாகவும், இது சீருடை விதிகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், மதத்தின் பெயரால் சமத்துவமின்மையை ஏற்படுத்துவதை தடுக்கவும், கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னை போல தமிழகத்தில் ஏற்படாமல் தடுக்கவும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாகரிக சமுதாயமான இந்திய சமுதாயத்தில் மதத்தின் பெயரால் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்பதால், தமிழகத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகள் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கல்வி நிறுவனங்களில் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமுள்ளதாகவும், குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக மட்டுமல்லாமல் பொதுவாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எப்படி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.