ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் என்று வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தீபக், தீபாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் அமர்வு, கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம்,1956ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15(2)(a) இன் படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் என்று தீர்ப்பளித்தனர். இதையடுத்து போயஸ் கார்டன் இல்ல சொத்துக்கள் தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூர் வியாசரபுராவைச சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சகோதரர் தான் என்றும், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியினுடைய மகன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கைக் கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும் ஆனால் சில பிழைகள் காரணமாக மனு திருப்பியளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு , தனக்குள்ள இருதய நோய் காரணமாக இந்த வழக்கை தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியான ஜெயம்மாவின் மகன் தான் என்றும், அந்த மனுவில் தெரிவித்துள்ளார். தன் தந்தை ஜெயராமன் இரண்டாவது மனைவியாகத்தான் வேதவள்ளி என்கிற வேதம்மாவை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா என்றும் தெரிவித்துள்ள அவர், ஜெயக்குமாரின் வாரிசுகள் தான் தீபா, தீபக் என்று தெரிவித்துள்ளார். கடந்த 1950ஆம் ஆண்டு ஜெயராமனிடம் ஜீவனாம்சம் கேட்டு, மைசூர் நீதிமன்றத்தில் தனது தாய் தாக்கல் செய்த வழக்கில் அப்போதே ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதாவை பிரதிவாதிகளாக சேர்த்ததையும் சுட்டிக்காட்டி உள்ளார். இந்து வாரிசுரிமைச் சட்டப்படி தனக்கும் ஜெயலலலிதாவின் சொத்தில் பங்கு உள்ளது என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நிர்வாக உத்தரவிற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை பட்டியலிடுவது தொடர்பாக தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்கும்படி, மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 10 ஆம் தேதி தள்ளிவைத்துள்ளது.