கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன: செந்தில் பாலாஜி!

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது கோவை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கோவையில் சாலைகள் மோசமாக இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மெட்ரோ திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செந்தில் பாலாஜி கூறியதாவது:-

கோவை மெட்ரோ ரயில் திட்டம் வரலாற்று சிறப்புமிக்க திட்டம். இதற்காக பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்துள்ளனர். மெட்ரோ அமைக்கும் பணிகளுக்காக ரூ.9 ஆயிரம் கோடி நிதிக்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் நிதி ஆதாரங்கள் பெற்று ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். கோவை மாவட்டத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்து வருகிறார். கோவைக்கான திட்டங்கள் ஐடி நிறுவனங்களுக்காக டிஎன் டெக் சிட்டி திட்டம் கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்கா அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் எழில்மிகு கோவை திட்டம் யாரும் எதிர்பார்க்காதது. மானியக் கோரிக்கைகளிலும் இன்னும் பல அறிவிப்புகள் வெளியாக உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கோவை மத்திய சிறைச்சாலை மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, கோவை மத்திய சிறை மாற்றப்பட்டால் தான் செம்மொழி பூங்கா அமைக்க முடியும். தற்போது செம்மொழி பூங்காவுக்கான ஒரு பகுதிகள் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மீதமுள்ள பணிகள் சிறைச்சாலை மாற்றம் செய்யப்பட்ட பின் நடைபெறும் என்று தெரிவித்தார். அதேபோல் சாலைகளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் தான். 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் ஒரு சாலை அமைக்க முடியாது. ஆனால் 5 ஆண்டுகளுக்கான மேலான சாலைகள் தான் கோவையில் அதிகளவில் பழுதாக உள்ளது. கடந்த ஆட்சியில் கோவையின் சாலைகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இருசக்கர வாகனம் கூட போக முடியாத சூழல் தான் இருக்கிறது. குறிப்பாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படவில்லை. அதனை கவனத்தில் கொண்டு தான் ரூ.223 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கோவை மாநகராட்சியில் மட்டும் 121 கிமீ தூரத்திற்கு சாலை பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, கோவையில் ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தப்படும். வெள்ளலூர் பேருந்து நிலையத் திட்டம் நிச்சயம் விரைந்து கொண்டு வரப்படும். கோவையில் சாலைகள் அமைக்கப்படும் திட்டத்திற்கான டெண்டர் பணிகள் முடிவடைந்து இன்று தொடங்கியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 6 இடங்களில் சாலைகள் புதுப்பிக்கும் திட்டம் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் புதுப்பிக்கப்படாத சாலைகள் குறித்து மக்கள் அளித்த மனுக்கள் அடிப்படையில், மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு முதலமைச்சரிடம் கொண்டு சென்றோம். அதில் கோவைக்கு சிறப்பு நிதியாக ரூ.200 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டு, படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.