கூட்டணி தொடர்பாக எடியூரப்பா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து: குமாரசாமி

பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்துள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறி இருப்பது அவரது தனிப்பட்டக் கருத்து என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி கூறினார்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – பாஜக கூட்டணிக்கான புரிதல் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அமித் ஷா சம்மதித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி, “எடியூரப்பா நேற்று கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. நாங்கள் இரண்டு மூன்று முறை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளோம். என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நேரம் இருக்கிறது” என தெரிவித்தார்.

பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் முரண்படக்கூடிய கொள்கைகளைக் கொண்டிருப்பவை என்றும் எனவே, அவர்களுக்குள் கூட்டணி அமைந்தால் அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த குமாரசாமி, பாஜகவும், “மதச்சார்பற்ற ஜனதா தளமும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் காரணமே மக்கள்தான். மக்களுக்கு இது தேவையாக உள்ளது. கடந்த 2, 3 மாத கால காங்கிரஸ் ஆட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது, மாநிலத்தைக் கொள்ளையடிக்கிறது. மக்கள் மாற்று வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். கர்நாடக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். அது எனக்குத் தெரியும். கர்நாடக காங்கிரஸ் கட்சி உள்ளுக்குள் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது என தெரிவித்தார். பாஜக உடன் கூட்டணி ஏற்படுமானால், உங்கள் தொண்டர்களை எவ்வாறு ஏற்க வைப்பீர்கள் என்ற கேள்விக்குப் பதில் அளித்த குமாரசாமி, இதில் எந்த பிரச்சினையும் இல்லை. 2006ல் நான் பாஜகவோடு கைகோத்துள்ளேன். அப்போது 20 மாத காலம் நான் முதல்வராக இருந்துள்ளேன். அந்த 20 மாத நிர்வாகத்தின் காரணமாக என்மீது நல்லெண்ணம் உருவானது” என தெரிவித்துள்ளார்.