அதிமுக – பாஜக இடையே விரிசல் ஏற்பட்டு, மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக தலைவர்கள் பாஜக தேசிய தலைமையிடம் வலியுறுத்தியதாக கூறப்படும் நிலையில், அதிமுக பாஜக மோதல் பற்றி கிண்டலாக விமர்சித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மதுரை தமிழ் மாநாட்டில் முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டு ஓடி வந்தவர் அண்ணாதுரை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதையடுத்து அதிமுக மூத்த தலைவர்களான செல்லூர் ராஜு, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் அண்ணாமலைக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினர். ஆனாலும், அண்ணாமலை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல், அண்ணா பற்றி தான் பேசியது சரிதான் என்று கூறி அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் சரமாரியாக விளாசினார்.
இந்நிலையில் தான் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என அதிரடியாக அறிவித்தார் அதிமுகவின் ஜெயக்குமார். இதனையடுத்து இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர்கள் இன்று டெல்லி சென்றனர். அதிமுக தலைவர்களை அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நிலையில், இது தொடர்பாக பாஜக தலைமையிடம் முறையிடுவதற்காக அவர்கள் டெல்லி சென்றதாக கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்றும், அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை பாஜக தலைமை நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் அதிமுக – பாஜக கூட்டணியில் மோதல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அது மோதலே கிடையாது. சும்மா காமெடி டைம். அது அவர்களின் உட்கட்சி பிரச்சனை” என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மேலும் சனாதன தர்மம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் இன்னும் வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் உரிய விளக்கம் அளிக்கப்படும். நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.